Saturday, July 27, 2024

Latest Posts

சமஸ்டியை பெற இந்தியாவே பாதுகாப்பு அரண் – மோடிக்கான வாழ்த்துச் செய்தியில் சிறிதரன்

ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஸ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். இதற்கு பாரத பிரதமர் துணை நிற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தாங்கள் இந்திய மக்களின் மன உணர்வுகளை வென்றிருப்பதன் பிரதிபலிப்பாகவே மக்களவைத் தேர்தலில் பெற்றிருக்கும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. பாரதத்தின் அரசியல், பொருளாதார, சமூக நலன் சார்ந்து தாங்கள் ஆற்றவிருக்கும் பணிகளின் விளிம்பில், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே இழையோடியிருக்கும் உறவின் கனதியை உயிர்ப்பிக்க வேண்டிய காலக்கடமையும் தங்களிடத்தே தரப்பட்டிருப்பதாக நாம் உணர்கிறோம்.

இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஸ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுத்தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதே எமது இனத்தின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், தங்களது அனுசரணையும் அழுத்தமும் இன்றி இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தமக்குரித்தான உரிமைகளுடன் வாழும் வாய்ப்பை பெறமுடியாது என்பதை நாம் திடமாக நம்புகிறோம்.

போருக்குப் பின்னரும் இன, மத அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் எமது மக்களின் ஆட்சி உரிமை மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, எமது கட்சியாகிய இலங்கை தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியத் தரப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளில், இந்திய மத்திய அரசு தனது முதன்மையான பணிகளை ஆற்ற முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை எமது இனத்தின் கோரிக்கையாக தங்களிடம் முன்வைக்கிறேன்.

இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் தனித்துவம் மிக்க தலைவராக, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் மக்கள் ஆணை பெற்று, பாரத பிரதமராக ஆட்சிபீடம் ஏறியிருக்கும் தங்களின் பணிகள், இந்திய மற்றும் ஈழ தேசங்களின் நலனுக்கான வரலாற்றுப் பணிகளாய் அமைய வாழ்த்தி நிற்கிறேன் என்றுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.