புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களை கொண்டு முழுமையாக இயங்கக்கூடிய மின்சாரத்தை வழங்கும் இலங்கையின் முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி 15,000 குடும்பங்கள் வசிப்பதாகவும் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் செந்தில் தொண்டமான் கூறினார்.
மேலும் காற்றுமின்சாரம், சூரிய ஆற்றல், நீர்மின்சாரம் போன்ற புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களை கொண்டு, முழுமையாக இயங்கக்கூடிய மின்சாரத்தை வழங்கும் இலங்கையிலேயே முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவதற்கான ஆய்வினை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.