“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் மற்றும் பணம் வழங்கி ரணசிங்க பிரேமதாஸ அன்று செய்த தவறின் இரண்டாம் பாகத்தை, 13 பிளஸ் எனக் கூறி இன்று செய்வதற்கு அவரின் மகனான சஜித் பிரேமதாஸ முற்படுகின்றார்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விமர்சித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் சஜித் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் அடிபணிந்துவிட்டார் போலும் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“புலிகள் அமைப்பால் பொலிஸார் கொலை செய்யப்பட்ட கொடூரமான நாள் நேற்றாகும். அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸவால் எடுக்கப்பட்ட சில தவறான முடிவுகளாலேயே இந்த அநியாயம் ஏற்பட்டது.
அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட புலி உறுப்பினர்களை அன்று கொழும்புக்கு அழைத்து வந்து, பேச்சு நடத்தி ஆயுதங்கள் மற்றும் நிதி என்பன புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டன. இராணுவத்தினர் முகாம்களுக்கு அனுப்பட்டனர். அப்போதுதான் நிராயுதபாணியாக இருந்த 700 பொலிஸார் கொல்லப்பட்டனர்.
சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்துக்குச் சென்று, 13 பிளஸ் அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 13 பிளஸ் என்றால் என்ன என்பது குறித்து அவருக்குத் தெளிவு உள்ளதா எனத் தெரியவில்லை.
ஜே.ஆர். ஜயவர்தன 13 ஐ கொண்டு வந்திருந்தாலும் 13 ஐ முழுமையாக அமுலாக்கவில்லை. அரச பிரதிநிதியாக ஆளுநர் செயற்பட்டார். அதன்பின்னர் பிரேமதாஸ, சந்திரிகா, டி.பி. விஜேதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதிப் பதவிக்கு வந்திருந்தாலும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதில் உள்ள பாரதூரத்தன்மையால் அதனைச் செயற்படுத்தவில்லை.
ஆனால், சஜித் பிரேமதாஸ தற்போது 13 பிளஸ் எனக் கூறுகின்றார். மாகாணங்களில் பொலிஸ் கட்டமைப்பு உருவாகினால் என்ன நடக்கும்? சஜித் ஜனாதிபதியாகி அவர் கூறியதைச் செய்தால், அன்று ரணசிங்க பிரேமதாஸ படையினரை நிராயுதபாணியாக்கிய முடிவை விடவும் பயங்கரமானதாக அமையும்.
தேர்தலுக்கு முன்னரே இதைக் கூறியது நல்லம். அப்போது மக்களுக்கு முடிவொன்றை எடுக்க முடியும். பிரேமதாஸ நாட்டுக்கு பல நல்லவிடயங்களை செய்தார். ஆனால், அமைதிப் பேச்சுக்குச் சென்று முழு நாட்டையும் நாசமாக்கினார். இறுதியில் குண்டுத் தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் புண்ணியத்தால் போர் முடிவுக்குக் கொண்டுவர்படபட்டது. ஆனால், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இன்னும் உள்ளன. தமது இலக்கை அடைவதற்கு உலகில் பல நாடுகளில் அவை செயற்படுகின்றன. தேர்தல் நெருங்கும்வேளை அந்த அமைப்புக்களுக்குச் சஜித் அடிபணிந்துவிட்டார்போலும். எனவே, முக்கியத்துவமிக்க – நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற பிரச்சினைகளின்போது சஜித் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.” – என்றார்.