அரசாங்க அதிபர் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்க முயற்சிசெய்கின்றார் – கஜேந்திரன்

0
137

”அரசாங்க அதிபரும், கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்கத் திட்டமிட்டு செயற்படுகின்றனர்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறையை கண்டித்து நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களின் அதிகாரங்களைப் பறித்து அதனுடைய செயற்பாடுகளை முடக்கி கல்முனையில் உள்ள தமிழர்களின் உரிமையை முற்றாக பறித்தெடுக்கும் நோக்கத்தோடும் இந்த நிலங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்யும் நோக்கத்தோடும் நீண்டகாலமாக திட்டமிட்ட செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த பறிக்கப்பட்ட பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் மீளவும் வழங்கப்பட வேண்டும் எனவும் ஒரு தனியான கணக்காளர் நியமிக்கப்படவேண்டும் எனவும் தொடர்சியாக கல்முனை வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட நிலையிலே கடந்த 92 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர்.

எனினும் இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணவேண்டிய அரசாங்க அதிபர் இதுநாள்வரையும் இது தொடர்பான எந்த நடவடிக்கையினையும் எடுக்க வில்லை.

ஆனால் இந்த போராட்டம் ஆரம்பித்த பின்னர் அரசாங்க அதிபர் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு பல தடவை வருகை தந்துள்ளார்.

அதேவேளை கல்முனை தெற்கு பிரதேச செயலாளர், இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாகச் சட்டத்துக்கு முரணாக அலுவலக விவகாரங்களில் தலையிட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதேவேளை நேற்றைய தினம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வீதி மறியலில் ஈடுபட்ட போதும், இனங்களுக்கிடையே முறுகல் வந்துவிடுமோ என்ற எந்த கவலையும் இல்லாமல் அரசாங்க அதிபர் உள்ளார்.

இந்த நிலையில் அரசாங்க அதிபர் தனது அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு தெரிவித்ததையடுத்து இனமுறுகல் வரக்கூடாது என இந்த ஏற்பாட்டாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி அரசாங்க அதிபர் காரியாலயத்துக்குச் செல்வதாக முடிவெடுத்துள்ளனர்.

இதில் பொது உள்ளாட்டு அலுவல்கள் அமைச்சும் பாராமுகமாக இருப்பது என்பது கவலைக்கு உரிய விடையம்.

மக்கள் தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டும் தான் இந்த உரிமை உறுதிபடுத்திக் கொள்ளமுடியும். வேறு எந்தவழியிலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டுவதேடு மக்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டங்களுடன் நாங்கள் தொடர்ச்சியாக பக்கபலமாக நிற்போம்” இவ்வாறு செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here