நேற்று (26) இரவு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேசவாசிகள் குழுவொன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 8 பேர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு சுமார் 200 பேர் ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொலிஸ் நிலையத்தின் வாயிலை உடைத்து உள்ளே செல்ல முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களை கைது செய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்திய போதிலும் குறித்த குழுவினர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதுடன் பொலிஸ் நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசித்தால், கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துவிட்டு ஹகுரன்கெத்த-கண்டி பிரதான வீதியில் சுமார் ஒரு மணித்தியாலம் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தின் வாயில் கவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தவறாக நடந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.