முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று (4) மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே மாதம் (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு ஜீலை மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதற்கமைய மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் நாளை இடம்பெற இருக்கிறது.இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மீளவும் இன்றைய தினம் CCTV கமரா, பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.