அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது?

0
111

அத்துரிகிரியவில் இன்று (08) பச்சை குத்தும் மையம் திறப்பு விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதுருகிரிய நகர சந்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில், இன்று காலை பச்சை குத்தும் நிலையம் திறக்கப்பட்டது.

துலான் சஞ்சுலா என்ற பச்சை குத்தும் நபரினால் இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதம அதிதிகளாக, பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு அங்கிருந்த சிசிரிவி கெமராக்களிலும் பதிவாகியுள்ளது.

காலை 10.15 மணியளவில் ஒருவல வீதியூடாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தில் இருந்து மீண்டும் ஒருவல வீதிக்கு திரும்பி கட்டிடத்திற்கு அருகில் வீதியில் நின்றபது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

பின்னர், துப்பாக்கி ஏந்திய இருவர் மேல் தளத்தில் உள்ள பச்சை குத்தும் மையத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதும் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள், பச்சை குத்தும் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச்சூடு தாக்குதலின் போது, ​​ஒருவர் மறைந்து தப்பிப்பதை காணக்கூடியதாக உள்ளதுடன், அவர் கிளப் வசந்தவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி பச்சை குத்தும் நபர் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, நிலையத்தில் உள்ள இருக்கைகள் அருகே பல ஐந்தாயிரம் ரூபாய் நாணயத் தாள்களையும் காணக்கூடியதாக உள்ளது.

பிரபல பாடகி கே. சுஜீவாவும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளார்.

காயமடைந்த 55 வயதான வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த, அவரது மனைவி மெனிக் விஜேவர்தன, மற்றுமொரு நபர் மற்றும் பெண்ணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் அதுருகிரிய – ரத்துவிலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான நயன வாசுல விஜேசூரிய ஆகிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு பெண்களின் நிலைமை ஓரளவு மோசமாக உள்ளதாகவும் அவர்களில் கிளப் வசந்தவின் மனைவிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த பாடகி கே. சுஜீவா மற்றும் ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே. சுஜீவாவின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இன்று மதியம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மற்றைய நபர் முதுகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளப் வசந்த என்பவரே இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் பிரதான இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகள் வந்த காரில் சாரதி உட்பட நால்வர் இருந்ததாகவும் அவர்களில் இருவர் துப்பாக்கிகளுடன் மேல் தளத்திற்குச் சென்ற நிலையில், மற்றுமொருவர் டி56 துப்பாக்கியுடன் காரில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கொலையாளிகள் கொரதொட்ட பகுதியில் தமது காரை நிறுத்திவிட்டு வேறு வேனில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனில் வேறு பகுதிக்கு சென்ற மர்மநபர்கள் மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர்கள் வந்து தப்பிச் சென்ற வாகனங்கள் அனைத்தும் போலி இலக்கத் தகடுகளைக் கொண்டவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக மேல் மாகாண தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தை கடுவெல பதில் நீதவான் டி.பி.ஜி கருணாரத்ன இன்று பிற்பகல் நேரில் பார்வையிட்டார்.

அந்த இடத்தில் பல தோட்டா உறைகள் காணப்பட்டதாகவும், அதில் “KPI” போன்ற பயன்பாடு காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரானுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் துப்பாக்கி ஒன்றும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பித்த பச்சை குத்துபவரான துலான் சஞ்சுலவுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

திட்டமிட்டு இந்த பச்சை குத்தும் நிலையத்தை திறப்பதற்கு பிரதம அதிதியாக சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த அழைக்கப்பட்டிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here