இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டக் கடல் எல்லைகளில் ரேடார் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப்பிரிவு சார்பில் யுவான் வாங்க் என்ற பெயரில் உளவுக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இது 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற பெயர்களில் 7 உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன.
இதில் சீன உளவு கப்பலான யுவான் வாங்க் 5 இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நங்கூரமிட்டுள்ளது. இதை வரும் 22-ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது.
யுவான் வாங்க் 5 கப்பலில் 400 பேர் பணிபுரிகின்றனர். இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் ஆன்டனாக்கள், மின்னணு கருவிகள் மூலம் ஏவுகணைகள், செயற்கைக்கோள்களை துல்லியமாகக் கண்காணிக்க முடியும். கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவு வரை உளவுபார்க்க முடியும்.
அந்த வகையில் இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம், இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்கள் ஆகியவற்றை சீன உளவு கப்பலால் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் தமிழக காவல் துறை, கடலோரக் காவல் கண்காணிப்புக் குழுமம், இந்திய கடற்படை, இந்தியக் கடலோரக் காவல் படை, விமானப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படை, கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல்கள், ஃஹோவர் கிராஃட் படகுகள், ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கலங்கரை விளக்கங்களில் உள்ள ரேடார் கருவிகள் மூலமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.