Friday, September 20, 2024

Latest Posts

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது – உள்ளடக்கம் என்ன?

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே நோக்கமாகும்.’ என சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கண்டியில் வைத்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதம மகாநாயக்க தேரர்களுக்கு கைளியத்து வெளியிட்டு வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிடுவதற்கு முன்னதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, அவர் மல்வத்தை மகாநாயக்கரிடம் சென்று ஆசி பெற்றுக் கொண்டதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் கையளித்துள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு,

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்….

  • வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்
  • கடன் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியம்
  • நிதி மற்றும் பரிமாற்ற விகித கொள்கை
  • வருமான வளர்ச்சியை அடைதல்
  • செலவுக் கட்டுப்பாடு
  • பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்
  • அரசுத்துறை முகாமைத்துவ மற்றும் டிஜிட்டல்மயமாக்கல்
  • வலுசக்தி மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தங்கள்
  • உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தம்
  • கமத்தொழில், மற்றும் கால்நடை அபிவிருத்தி
  • காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்
  • போக்குவரத்து – நெடுஞ்சாலை, கடல் மற்றும் ஆகாயம்
  • மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள்
  • சுற்றுலாத் துறை
  • விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி
  • கைத்தொழில் துறை
  • சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்துறை
  • இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறை
  • நிர்மாணத்துறை
  • மின்சக்தி மற்றும் வலுசக்தி

அனைத்து இனம் மற்றும் மதத் தலைவர்கள், மக்களின் ஆசிர்வாதத்துடன், புதிய அரசியலமைப்பொன்று இலங்கையில் கொண்டுவரப்படும் வரை 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்பதுடன், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஆறுமாதகாலப் பகுதிக்குள் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஏனைய இரண்டு பிரதான வேட்பாளர்களாக உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சாதகமான காரணிகள் எதனையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கவில்லை.

ஆனால், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசிலமைப்பின் ஒருபகுதியாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

”மதத் தலைவர்கள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சத்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது.

இந்த செயல்முறையில், எமது கொள்கை என்னவென்றால், தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய நாடாளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும்.

முடிவெடுக்கும் செயல்முறையில் குடிமக்களை செயலில் ஈடுபடுத்த கிராம அரசு மற்றும் நகர அரசு எனப்படும் சமூக அடிப்படையிலான ஜனநாயக நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன், மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் தேவையான முறையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம்.” எனவும் கூறியுள்ளார்.

”6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும், மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். அரசு ஆதரவுடன் மக்கள் தொகை மாற்றங்கள் செய்யப்படாத கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக முதலீடு செய்ய விசேட சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சமூக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டமைக்கவும் அபிவிருத்தி செய்யவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிசெய்வதற்கு ஒரு சர்வதேச ஒத்துழைப் பு மாநாட்டை ஏற்பாடு செய்வோம்.” என்றும் சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமாக தள்ளிப்போடப்பட்ட உள்ளுராட்சி தேர்தல்களை விரைவாக நடத்த தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் குடிமக்கள் எளிதாக நீதியைப் பெறும் வகையில், மேல்முறையயீட்டு நீதிமன்ற விசாரணைகள் ஒவ்வொரு மாகாணத்திலும் நடத்தப்படத்தவும் உரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இதற்கு அடிப்படை உரிமைகள் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பான அடிப்படை நீதிமன்ற அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.