ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கிளிநொச்சியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இன்று மக்களைப் பலரும் தவறாக திசை திருப்பி விட முயற்சிக்கின்றார்கள். காணி உறுதிகள் அற்ற மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலேயே தீர்வு வழங்க முடியும். சஜித் பிரேமதாஸ அறைகுறையான வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்து மக்களை நடுத் தெருவில் விட்டுள்ளார்.
மறுமுனையில் அநுரகுமார திஸாநாயக்க பற்றி இளையோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கட்சியின் வரலாறு என்னவென்பது மக்களுக்குத் தெரியும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியும்.
அநுரவையோ சஜித்தையோ மக்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி மக்களுக்குச் சுத்தமான குடிதண்ணீர் கிடைக்க வழி செய்தார்.
அன்று அரசை ஒப்படைத்தபோது ஏற்காதவர்கள் வீட்டின் நிர்மாணம் முழுமையாகக் கட்டிய பின்னர் வந்து குடியமரலாம் என்று நினைக்கின்றார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி பல பொய்களைச் சொன்னாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடைமுறைச் சாத்தியமான விடயங்களை மட்டுமே செய்வார்.” – என்றார்.