நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதாக சமூக ஆர்வலரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் விதிகள் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட சில அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவைக் கோரியே தரிந்து உடுவரகெதர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை இன்று காலை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் இந்த சட்டமூலம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.