அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் அண்மையில் ஏற்பட்டிருந்தது.
அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இடைக்கால சட்டத்தினை ஆதரிக்கின்றனர். எனினும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அதை எதிர்த்தும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்தி (Kevin McCarthy) சட்டம் மீது வாக்கெடுப்பு நடத்தத் தயாரானார். எனினும் அவருடைய சொந்தக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் அவருக்குச் சிரமம் நீடித்தது எனலாம்.
அதேவேளை மெக்கார்தியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றுவோம் என்று அவருடைய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மிரட்டல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
நிலைமை இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்திக்கு (Kevin McCarthy) எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பிறகு குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மெக்கார்த்தியை பதவியில் இருந்து நீக்குவதற்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 216 ஆகவும், மெக்கார்த்திக்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 210 ஆகவும் பதியப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையின் 208 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றில் இவ்வாறு நீக்கப்பட்ட முதல் சபாநாயகர் மெக்கார்த்தி என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.