குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, தகாத முடிவுகளை விமர்சித்து, அதிகாரம் இல்லாவிட்டாலும் கல்வித் துறையில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்கியதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமகி கல்வி ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குரு ஹரசர – 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகம் பூராவும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வை வழங்குவதே இவ்வருட ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாக இருந்தாலும், இலங்கையில் எந்தளவுக்கு தீர்வு காண முடியும் என்பது பிரச்சினையாகவே உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது தரமான மனித வளம் நாட்டுக்கு கிடைக்கும் என்றும், கல்வித்துறையில் பிரச்சினைகள் ஏற்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
சிலரால் முன்னெடுக்கப்படும் பிற்போக்கு அரசியல் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாம் எப்போதும் கல்வித்துறையில் கவனம் செலுத்தி வருவதாகவும், அதன் காரணமாகவே கல்வியின் பல்வேறு நிலைகள் மற்றும் அவற்றின் பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு தெளிவான புரிதல் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஒரு கட்சியாக தனது தலைமையிலான சமகி ஜன பலவேக, குறைகளை சுட்டிக் காட்டுவதுடன் மட்டுப்படுத்தாமல், முடிந்தவரை அவற்றுக்கான தீர்வையும் வழங்கியதை நினைவுகூர்ந்தார்.
நாட்டின் பல பிரச்சினைகளுக்கு டொலரையும் ரூபாவையும் நம்பியே தீர்வு காணப்படுவதாகவும், சம்பள முரண்பாடுகளை களைந்து சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு திட்டமிடப்பட வேண்டுமெனவும், அதற்காக பொருளாதாரத்தை சுருங்கச் செய்வதன் மூலம் அல்ல, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பணம் உழைக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, கிராமிய மட்டத்தில் வசதிகள் குறைந்த பாடசாலைகளைப் பாதுகாப்பதற்காக வளர்ப்புப் பாடசாலை முறையையும் சில பிள்ளைகளுக்கு பெற்றோர் முறையையும் மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.அரசாங்க பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலக் கல்வியை அபிவிருத்தி செய்வதன் மூலம் சிறுவர்களுக்கு உலகம் திறக்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.