Friday, October 18, 2024

Latest Posts

கிளிநொச்சியில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளருக்கு ஓஸியில் அரசாங்க விடுதி வசதி

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய விடுதியே இப்படி அரசியல்வாதியான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் தனிப்பட்ட அலுவலரான அவரது இணைப்பாளருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காலத்திலேயே இந்த விடுதி இப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலக சுற்றுநிரூபத்தில் தெளிவாக விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இப்படி ஒரு தனிப்பட்ட அலுவலருக்கு அரச விடுதி வசதி வழங்குவது குறித்துக் குறிப்பிடப்படாதபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் இந்த விடுதி வசதி சட்டமுரணாக வழங்கப்பட்டுள்ளது.

சட்டமுரணாக இந்த விடுயைக் கிளிநொச்சி மாவட்டத்தின் அப்போதைய அரச அதிபரான திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த விடுதியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளரே தங்கியிருந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக மாவட்ட செயலகத்தின் விடுதியில் தங்கியிருந்தமை மட்டுமன்றி அதற்கான வாடகைக் கொடுப்பனவு, மின்சாரக் கட்டணம் எவையும் அவரால் செலுத்தப்படவும் இல்லை.

வாடகையோ அல்லது மின்சாரக் கட்டணமோ செலுத்தாமல் தங்கியிருந்த விடுதியின் இரண்டு ஆண்டு கால மின்சாரக் கட்டணம் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து கட்டப்பட்டுள்ளது என்று மாவட்ட செயலகம் எழுத்து மூலம் வழங்கிய தகவல் அறியும் சட்டத்தின் கீழான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்தின் அரச விடுதியை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க இணக்கம் தெரிவித்து 2020.11.10 அன்று அப்போதைய மாவட்ட அரச அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்கு வழங்கப்பட்டக் கடிதத்தில் விடுதிக்கான மின்சாரக் கட்டணத்தைத் தங்களால் நேரடியாகச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020.11.10 ஆம் திகதிய இவ்வாறு மாவட்ட அரச அதிபர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருக்கு விடுதியை வழங்குவதற்கான இணக்கக் கடிதத்தில் குறிப்பிட்டவாறான மின்சாரக் கட்டணம் அந்தக் கடித ஏற்பாட்டுக்கு மாறாக ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து செலுத்தப்பட்ட காலத்திலும் அதே அரச அதிபரே பணியில் இருந்துள்ளார்.

இவற்றின் மூலம் இந்த விடுதிக்கான பொருளாதார வாடகை கணிப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கு அரச பணம் வீணடிக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.