புதிய கடற்தொழில் சட்டம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் சிலர் கடற்தொழில் மக்களை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதிய கடத்தொழில் சட்ட முன்மொழிவு தொடர்பில் பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதாக யாழில் மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையில் எந்த விதமான சட்டங்களும் புதிதாக இயற்றப்படவில்லை. கடந்த காலங்களை இயற்றப்பட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மீனவ மாவட்டங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
ஆனால் யாழ்ப்பாணத்தில் சிலர் கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படுவதாகவும் வெளிநாட்டு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படப்போவதாக கூறியதாக அறிந்தேன்.
கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டம் சகல மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் இடம்பெற்றதன் பின் திருத்த வேண்டிய விடயங்கள் இருந்தால் திருத்தப்பட்டு சட்டமாக்கப்படும்.
ஆனால் சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்று மீனவ சங்கங்களுடன் கலந்து ரையாடல் என்ற போர்வையில் புதிய கடற்தொழில் சட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாக மீனவ சங்கங்களை குழப்பி வருகின்றனர்.
ஆகவே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கினங்க கடற் தொழில் மக்களை பாதிக்காத வகையில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.