Sunday, September 29, 2024

Latest Posts

ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்

” இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்.” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நாம் 200’ தேசிய நிகழ்வுக்கு வழங்கியுள்ள வாழ்த்து செய்தியிலேயே முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் வாழ்வு என்பது 200 ஆண்டுகளை எட்டுகின்றது. இரண்டு நூற்றாண்டுகளாக தனிபெரும் இனமாக வாழ்ந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்நிகழ்வில் காணொளி மூலம் நான் உரையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்த அருமை சகோதரர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றிகள்.

மனிதன் வாழ்ந்திராத மலைக்காடுகளை மலையக தோட்டங்களாக மாற்றியவர்கள்தான் மலையக தமிழர்கள். 1823 இல் இலங்கையில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பமானதில் இருந்துதான் மலையக தமிழ் தொழிலாளர்களின் வரலாறு தொடங்குகின்றது. கோப்பி தோட்டங்கள் பெருக, பெருக இந்திய தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதன்பின்னர் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது. அதனையும் மலையக மக்கள் பலப்படுத்தினார்கள். பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும், காடுகளாக இருந்த நிலத்தை காசு பயிர்களாக விளைவித்தும் பின்தங்கிய பொருளாதாரத்தை முன்தங்கிய பொருளாதாரமாக மாற்றியவர்கள்தான் மலையக தோட்டத்தொழிலாளர். இப்படி கடந்த 200 வருடங்களாக இலங்கையின் நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினர். வழங்கியும் வருகின்றனர்.

இலங்கை நாட்டுக்காக தமது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது இரத்தத்தையும், வியர்வையையும், காலத்தையும், கடமையையும் இலங்கைக்காகவே ஒப்படைத்தவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலம் முதல் புலம்பெயர் தமிழர்களின் உரிமையைக் காப்பதில் கண்ணும், கருத்துமாக செயற்பட்டது. வாக்குரிமைக்காக குரல் கொடுத்தது. இப்படி தமிழர் மக்களின் உரிமைக்காக ஆரம்பக்காலம் முதல் குரல் கொடுக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக்கழகம்.

மலையக தமிழ் மக்களின் நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். மலையகத் தமிழர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும்போல கல்வியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், அவர்கள் மேலெலும் காலத்தை எதிர்பார்த்து தமிழகம் காத்திருக்கின்றது. சமூக உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.