Sunday, May 19, 2024

Latest Posts

பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவு திட்டத்தில் நிவர்த்திக்க முடியாது

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாதெனவும், அதற்கு தீர்வு காணும் வகையில் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்திய பின்னர் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் வலுவான பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாற்றம் காணும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுவதன் ஊடாக சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அந்த முறைமை மிகவும் அவசியமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சூழலை உருவாக்கும் வகையில், இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது காஸா எல்லை பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளை பாதிக்கக் கூடும் என்பதால் வரவு செலவு திட்டத்தின் சாதக தன்மைகள் மாறக்கூடும்.

அதனாலேயே உலக பலவான்களுடன் இணைந்து காஸா எல்லை பகுதியில் நடைபெறும் மோதல்களை தடுக்க முற்படுவதாகவும், மத்திய கிழக்கின் செயற்பாடுகள் இலங்கையில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி
தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொருளாதாரத்தை மீண்டும் நிலைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அதன் பின்னரே பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

நான் முன்வைத்த முதலாவது வரவு செலவு திட்டத்தில் பொருளாதார நிலைப்படுத்தலுக்கான
யோசனைகளை முன்வைத்திருந்தேன், தற்போதைய வரவு செலவு திட்டத்தில் பொருளாதார மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைத்துள்ளேன். ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலை இலக்கு வைத்தே இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். அது உண்மையல்ல. இம்முறை வரவு செலவுத் திட்டம் புதிய பொருளாதாரத்திற்கான பிரவேசத்தை ஏற்படுத்தல், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, அஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரித்தல், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சிகளை வலுவூட்டல் உட்பட அனைத்துத் துறைகளையும் உள்வாங்கியதாக அமைந்துள்ளது.

சிறந்த அரச சேவைக்கு சம்பள அதிகரிப்பு அவசியமாகும். புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக வரவு
செலவுத் திட்டத்தில் அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளோம்.

இலங்கையின் மிகப்பெரிய தனியார் மயப்படுத்தலை இந்த வரவு செலவுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. இரண்டு மில்லியன் அளவிலானோரை காணி உரிமையாளர்களாக மாற்றியுள்ளது.

அதேபோல் பசுமை வலுசக்தி தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதால், இலங்கையின் பசுமைப் பொருளாதாரத் துறையை முன்னேற்றம் அடையச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உலர் வலயத்தில் விவசாயத்தை நவீனமயப்படுத்தல் மற்றும் மீன்பிடித்துறையை விரிவுபடுத்தல் திட்டங்களுடன், சுற்றுலாத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை அறிந்துகொண்டு சுற்றுலா பயணிகள் வருகையை 05 மில்லியனாக
அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி போட்டித் தன்மையை ஏற்றுக்கொண்டு, இந்தியா மற்றும் பிராந்தியத்தின் விரிவான பொருளாதார கூட்டமைப்பு (RCEP), தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ASEAN), ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆகியவற்றுடன் தொடர்புகளை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன.

பங்களாதேஷ் போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுடன் போட்டியிடுவதற்கு காணப்படும் சவால்களை அறிந்துகொண்டு, எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, அதற்கு அவசியமான
சூழலையும் தற்போதைய வரவு செலவுத் திட்டம் உருவாக்கியுள்ளது.

அதேபோல் பொருளாதார மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க தகுந்த வகையில் கல்வித் திட்டத்திலும் மாற்றம் செய்ய வேண்டும்.
இதன்போது, தனியார் துறைக்காக புதிய தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தியாவின் சென்னையில் உள்ள ஐஐடி (IIT) பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்துக்கான புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, திருகோணமலையின் பிரதான துறைமுகம் மற்றும் மேலும் சாத்தியமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி இலங்கையை ஒரு அபிவிருத்தி மையமாக முன்னேற்றுவதன் மூலம் பிராந்திய சேவைகளை வழங்குவதற்கான
சாத்தியக்கூறுகளை ஆராய எதிர்பார்த்துள்ளோம்.

2030-2035 காலப் பகுதிக்குள் நவீன பொருளாதார இலக்குகளை அடைவதற்கு தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்வதை இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை வெற்றி கொள்ளவும், பொருளாதார முன்னேற்றத்திற்காக நாட்டை கட்டியெழுப்பவும் தனியார் துறை, வெளிநாட்டு உதவி மற்றும் ஓய்வுபெற்ற தொழில் வல்லுநர்கள் ஆகியோருடனான ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும்.

அத்தகைய அர்ப்பணிப்பு இல்லாமல், அரசாங்கம் மாத்திரம் செய்யக்கூடிய பணிகள் குறைவாகவே உள்ளன என ஜனாதிபதி தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.