நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ராஜபக்சர்களின் குடியுரிமையை பறிக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்தது.
இவர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும், இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (23) பொது மக்களிடம் கையெழுத்து திரட்டும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்தது.
‘நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம்‘ எனும் தொனிப்பொருளில் கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் சமய தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டு தங்களின் கையொப்பங்களை பதிவிட்டனர்.
220 இலட்சம் மக்களும் வீதிக்கு இறங்கி இந்த மனுவில் கையொப்பமிட்டு,’ராஜபக்சர்களைப் பாதுகாக்காமல் அவர்களின் குடியுரிமைகளை சட்டப்பூர்வமாக இரத்து செய்ய முன்வர வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘‘நாட்டின் வங்குரோத்து நிலமையினால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் பேருக்கு இழப்பீடு வழங்குவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். நாட்டிலிருந்து திருடப்பட்ட நிதியை நாட்டுக்கு கொண்டு வந்து குறித்த நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.‘‘ என்றார்.