இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது.
கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனை சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து ரஜினிகாந்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கமல்ஹாசனை கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்களின் ஷுட்டிங் இதே இடத்தில் நடைபெற்ற போது இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.