Thursday, December 5, 2024

Latest Posts

யாழ். வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட கூட்டம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பங்கேற்பு

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் பிரதேச செயலர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. தமது பிரதேசத்தில் அதிகூடிய பாதிப்பு ஏற்பட்ட இடங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய பிரதேச செயலர்கள் எதிர்காலத்தில் அங்கு மேற்கொள்ள வேண்டிய வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக இடர் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மாத்திரமே சமைத்த உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கக் கூடியதாக இருப்பதாகவும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கும் அவ்வாறான உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பல இடங்களில் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு மரக்கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு போதியளவு தேவையாக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இங்கு குறிப்பிட்டார்.

மேலும் தீவுப் பகுதிகளுக்கான மின்சாரத்துக்குரிய எரிபொருளை விரைந்து வழங்குவதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பை ஆளுநர் கோரினார். கடற்படையினர் அதற்குச் சாதகமான பதிலை வழங்கினர்.

இங்கு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் நியமிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார் எனவும், அவை வெளியில் தெரியவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், அதனைப் பட்டியலிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்தக் கடினமான நேரத்தில் அனைத்து அதிகாரிகளும், முப்படையினரும், பொலிஸாரும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். அதற்கு முதலில் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர் எதிர்காலத்திலும் இவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக இடித்தகற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய ஆளுநர், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன மக்கள் வீடுகள் அமைக்கும்போது பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைவாக உரிய இடைவெளிகளில் வீடுகளை அமைக்கின்றார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், இடர் நிலைமையின்போது முன்னெடுத்த கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஆளுநர், நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை ஆராய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க வேண்டும்.

இயற்கை அனர்த்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று தீர்வு வழங்க வேண்டும்.

சகல மாவட்டங்களிலும் முப்படையினர் போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து நடத்த பரீட்சைத் திணைக்களத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இயற்கை அனர்த்தத்தால் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணம் அந்த மக்களுக்குகே கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

டெங்கு நோய் மற்றும் ஏனைய தொற்றுநோய்கள் வராமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இயற்கை அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்க நிரந்தர தீர்வை அனைவருடனும் இணைந்து காண வேண்டும். இதற்கு முப்படையினரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியகுமார், முப்படைகளின் உயர் அதிகாரிகள், வடக்கு மகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.