நாடு திரும்பும் எண்ணம் பஸிலுக்கு இல்லை – உள்ளூராட்சி தேர்தலையும் நாமலே வழிநடத்துவாராம்உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்ஷவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் அமெரிக்கா பறந்த மொட்டுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தேர்தலின்போதுகூட நாடு திரும்பவில்லை.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலை நாமல் ராஜபக்ஷவே வழிநடத்தினார். ஓரிரு கூட்டங்களில் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழிநடத்த பஸில் வரவேண்டும் எனக் கட்சியின் செயற்பட்டாளர்கள் சிலர் கோரி இருந்தாலும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் எண்ணம் இல்லை என்று பஸில் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவே வழிநடத்துவார் எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான ஒத்திகை களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் பஸில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.