நெருக்கடியில் சிக்கியுள்ள அதன் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொழும்பு எதிர்பார்க்கும் நிலையில், தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பாக இலங்கை விரைவில் இந்தியாவுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்த மாத இறுதியில் ETCA பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடங்குவோம் என்று நம்புகிறோம்” ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்பட்ட சர்வதேச வர்த்தக அலுவலகத்தில் FTAக்களின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.
“இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரிவுபடுத்தும் மற்றும் ஆழப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த முறை [2016 மற்றும் 2019 க்கு இடையில்] நாங்கள் 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளோம்.
எனினும், அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் பேச்சுவார்த்தையை முடிக்க முடியவில்லை. ETCA ஆனது இலங்கையில் உள்ள சில பிரிவினரிடமிருந்து கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டது, முக்கியமாக தேசியவாத குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த உடன்படிக்கை இந்தியாவிற்கு நியாயமற்ற நன்மையை வழங்குவதாகக் கருதியது.
மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூலோபாயத்தின் ஒரு பகுதியே,சர்வதேச உடன்படிக்கைகள் என்று அவர் கூறியுள்ளார்.
உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 9.2% வீழ்ச்சி அடைந்துள்ளது, மற்றும் 2023 இல் மேலும் 4.2% வீழ்ச்சியடையுமென என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசாங்கம் அதன் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் IMF ஆதரவைப் பெறுவதற்கு அதன் கடன் வழங்குநர்களுடன் பேசுகிறது.
N.S