ஒரு வருடத்திற்கு முன்னர் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டைக் கைப்பற்ற எவரும் முன்வராத வேளையில் தான் சவாலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்தின் பின்னரே இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணைக்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம், இலங்கை திவால் நிலையிலிருந்து தப்பியதை அவர்கள் காட்டியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், உடைந்த பாலத்தை தன்னால் கடக்க முடிந்ததாகவும், அதற்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
“நான் இன்று சபையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாற்றுகிறேன். திவாலான நாடு என்ற முத்திரையில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதை இப்போது அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அந்தப் பயணத்தில் ஒரு நிலைக்கு வந்துவிட்டோம் என்றார்கள். இந்த பெருமைமிக்க பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் அர்ப்பணிப்பாக இருக்கிறேன். நான் கடந்த ஆண்டு திவாலான நாட்டைக் பொறுப்பேற்றேன். இந்த திவாலான நாட்டைக் பொறுப்பேற்க எந்தத் தலைவரும் முன்வரவில்லை. இந்த சவாலை ஏற்க அனைவரும் பயந்தனர். இப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றும் மாவீரர்கள் எவருக்கும் முன்வர தைரியம் இல்லை.. அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்… என ஜனாதிபதி குறிப்பிட்டார்.