Friday, December 27, 2024

Latest Posts

‘இமயமலைப் பிரகடனம்’ ஒரு மோசடி; தமிழர்கள் புறக்கணிப்பு

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட ஒரு பிரகடனம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச் சமூகங்களின் நல்வாழ்விற்கு இந்த தீர்மானம் வழிவகுக்கும் என அந்த தீர்மானத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறுவதை அமெரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையிலான தமிழர்கள் மற்றும் அமைப்புகள் கடுமையாகச் சாடி அதைப் புறந்தள்ளுவதாக அறிவித்துள்ளன.

அந்த தீர்மானம் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த பிரகடனமானது மோசடியானது என்றும் அது தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளுக்கு எதிரானது என்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து அது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளனர்.

”சுதந்திரம் அடைந்தது முதல் பௌத்த குருமார்களே அரசியல் வரலாற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர், அதுவே தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையே, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தமும் இரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது” என மிகவும் காட்டமாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் அந்த ஆறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரான்ஸிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பு மையம், ஐரிஷ் தமிழர் பேரவை, தென்னாபிரிக்காவின் சமாதனம் மற்றும் நீதிக்கான ஒற்றுமைக் குழு, சுவிஸ் தமிழ் நடவடிக்கைக் குழு மற்றும் மொரீஷியஸிலுள்ள இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இன மோதல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் தொடர்ச்சியாக வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனைப்படுகொலையில் அரசின் பங்கிருந்துள்ளது என்பதற்கு உறுதியாக ஆதாரங்கள் உள்ளன. யார் ஆட்சியில் இருந்தாலும் ஒரே இன, ஒரே மொழி மற்றும் சிங்கள-பௌத்த நாடு என்கிற நோக்கம் முன்னெடுக்கப்படுவதிலேயே அவர்கள் குறியாக இருந்துள்ளனர்”.

இந்த கூட்டம் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் எண்ணத்தில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது எனவும், இந்த ’பிரகடனம்’ தொடர்பிலான முழு நடவடிக்கையும் எவ்விதமான கலந்துரையாடலும் இன்றி இரகசியமாகச் செய்யப்பட்டது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

”இமயமலைப் பிரகடனம்” போன்று எந்தவொரு தீர்மானமும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் மூலமே செய்யபப்ட்டிருக்க வேண்டும், மேலும் கூட்டத்திற்கு முன்னதாக அது பொதுவெளியில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை” எனவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

போருக்கு பின்னரான காலத்தில், இதே போன்று அனைத்து அரசுகளுடன் உலகத் தமிழர் பேரவை  எடுத்த முயற்சிகள் யாவும் மோசமான தோல்வியைக் கண்டிருந்தன.

உள்ளூர் தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு பதிலாக உலகத் தமிழர் பேரவை நேபாளத்தில் பௌத்த தேரர்களுடன் பேசியுள்ளதை தமிழ் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சந்திப்பிற்காக விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.

“சுரேன், உங்களுடனோ அல்லது உங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுடனோ பேசுவதற்கு ஒன்றுமில்லை. போர் முடிந்த பிறகு, இந்த அரசு மிகவும் ஒடுக்குமுறை அரசாக இல்லாவிட்டாலும், ஒடுக்குமுறை அரசுகளில் ஒன்றாக இருந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட மாவீரர் தின நிகழ்வுகளின் போது, மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் கட்டவிழுத்துவிடப்பட்டது, தொடர்ச்சியாக மக்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசின் மீது கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டிய தருணத்தில் நீங்கள் அரசின் நடவடிக்கைகளை வெள்ளையடித்து மறைக்க முயல்கிறீர்கள், அதுவும் உள்நாட்டில் ஒருவரைக் கூட கலந்தாலோசிக்காமல் செய்துள்ளீர்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் விருப்பங்களை நிர்மூலமாக்கும் வகையில் உங்கள் குழு போதிய வேலைகளைச் செய்துள்ளது. உங்களது அண்மையை நடத்தை அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதையே காட்டுகிறது”.

உள்நாட்டிலேயே தீர்வு காணும் நோக்கில் உண்மையை கண்டறிந்து இணக்கப்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஆணைக் குழுவை அமைப்பதற்கு புலம்பெயர் அமைப்புகளுடன் வெற்றிகரமாக பேசி முடிவெடுத்துள்ளதாக, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற, உலகத் தமிழர் பேரவையின் இந்தக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாய்ப்பை அளிக்கும் எனவும் அந்த ஆறும் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.  

பெரும்பாலான புலம்பெயர் அமைப்புகள் தமது நேரம், பணம் மற்றும் உழைப்பை, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு பொறுப்புக்கூற வைப்பதற்காக செலவிடும் நிலையிலும், ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை முன்னெடுக்கும் சூழலிலும், அதை தடம்புரளச் செய்ய உலகத் தமிழர் பேரவை முயல்கிறது என அந்த அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

சரித்திர ரீதியாக அரசியல் தீர்விற்கான உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இதேபோன்று மற்றொரு ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன.

அதில் உலகத் தமிழர் பேரவை மீது நம்பிக்கை இல்லை மற்றும் அவர்கள் குறிப்பிடத்தகுந்த அமைப்பு இல்லை என  அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்,  வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெட்னா), இலங்கை தமிழ்ச் சங்கம் அமெரிக்கா,  ஒன்றிணைந்த அமெரிக்கர்கள் பி ஏ சி, அமெரிக்க தமிழர்கள் நடவடிக்கை குழு மற்றும் உலகத் தமிழர்கள் நிறுவனம் அமெரிக்கா ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

“கடந்த 2009ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 14 நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய அமைப்பிலிருந்து 10 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் விலகியுள்ளன. மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்காவின் தமிழ் செயற்பாட்டுக் குழு (USTAG) ஆகியவையும் உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகியுள்ளன. அதன் காரணமாக இந்த ஈடுபாடு மூலம் எட்டப்படும் எந்த முடிவும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு இருக்காது என்றும், எனவே அதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவே நம்பகத்தன்மை இருக்கும்”.

உலகத் தமிழர் பேரவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. எனினும் 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் பதவிக்கு வந்த மைத்ரிபால சிறிசேனவால் அது நீக்கப்பட்டது.
எனினும், பதவியிலிருந்து நீக்கபப்ட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மீண்டும் தடை செய்யப்பட்டு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ‘அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில்லை’ என கூறி ஓகஸ்ட் 2022இல் நீக்கப்பட்டது.

இதேவேளை “புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.”  என தெரிவித்ததாக  ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கையின் புத்தசாசன அமைச்சு, சில உயர்மட்ட பௌத்த பிக்குகள் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரின் கூட்டுப் பிரகடனம் தொடர்பில் தமக்கு எவும் தெரியாது என கூறியுள்ளதாக அமைச்சின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.