யானை – மனித மோதலைத் தடுக்கஉடனடியாக நடவடிக்கை எடுங்கள் – நாடாளுமன்றில் சத்தியலிங்கம் எம்.பி. கோரிக்கை

0
236

வன்னிப் பகுதியில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் அதிகரித்து இடம்பெறும் யானை – மனித மோதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதாரத்தில் வவுனியா மாவட்டம் ஏனைய மாவட்டங்களைப் போலவே, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு வாழும் விவசாயிகள் யானைகளின் தொல்லைகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.

கடந்த மாதம் எமது மாவட்டத்தில் மாத்திரம் 11 பேர் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருக்கின்றார்கள். ஆகவே, எமது பகுதிகளுக்கு யானை வேலி அமைப்பதற்கான நிதியை அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கீழ் மல்வத்து ஓயா திட்டம் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தத் திட்ட முன்மொழிவில் யானை – மனித மோதலைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் திட்டப் பிரதேசத்தில் இருந்து யானைகள் ஏனைய பிரதேசங்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் தற்போதுள்ள யானை – மனித மோதல் நிலைமையானது மிக மோசமடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரையில் இந்த விடயம் தொடர்பில் அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here