நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் இயங்கை இடர்களால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000 ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சரை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,
நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதிவரை பல மாவட்டங்களில் வீடுகள், பாதைகள், நெற்பயிர்கள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குளங்கள் மற்றும் மதகுகள் உடைந்ததால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடளாவிய ரீதியில் சுமார் 91,300 ஏக்கர் நெற்செய்கைகள் முழுமையாகவும், சுமார் 86,225 ஏக்கர் நெற்செய்கை பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், 173 சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுமையாகவும், 1,148 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 750 ஏக்கர் மரக்கறி பயிர்கள் நாசமாகியுள்ளன.
சேதமடைந்த நெற்பயிர்களில் 2 1/2 அல்லது 3 மாத நெல் இரகங்கள் அல்லது பொருத்தமான குறுகிய கால பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்கு தேவையான விதை நெல்லை வழங்க விவசாய திணைக்களம் செயற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் இழப்படு வழங்கப்படும்.” என்றார்.