சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு – இரண்டு மில்லியனை கடந்தது
இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிவரை இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் இதுவரை 161,383 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர். இந்தியாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், அதன் தொகை 35,131 ஆகும்.
அடுத்தபடியாக ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்திலிருந்து 12,822 பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 9,998 பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 பயணிகளும் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 399,224 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 189,289 பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 172,404 பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 131,379 பயணிகளும், சீனாவில் இருந்து 120,268 பயணிகளும், பிரான்சில் இருந்து 86,440 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.