இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 28 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அவற்றில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 சம்பவங்கள் குறித்து 57 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதோடு மூன்று துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாதாள உலகக் குழுக்கள் ஒன்றுக்கொன்று அடிக்கடி மோதிக்கொள்கின்றன. அந்த மோதல்களின் தொடர்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை ஒப்பிடும்போது, 2024இல் சிறியளவில் குறைவு காணப்படுகின்றது.
2023ஆம் ஆண்டில் 120 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதோடு அவற்றில் 65 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களால் நடத்தப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 99ஆக உள்ளது, இந்தச் சம்பவங்களில் 55 குற்றக் கும்பல்கள் ஈடுபட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் வன்முறை குற்றச் செயல்களில் அதிகரிப்பு இருப்பதாக மக்கள் பேசுகின்றார்கள். அதற்குக் காரணம் குற்றங்கள் சம்பந்தமாக ஊடகங்களில் அதிகளவான செய்திகள் காணப்படுகின்றன. இருப்பினும், அந்தக் குற்றங்கள் அண்மைய காலத்தில் தீவிரமடைந்துள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்கின்றோம்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்காலையில் ஐந்து பேர் கொல்லப்பட்டதையும், சில நாட்களுக்குப் பிறகு மல்வதுஹிரிபிட்டியவில் ஒரு பௌத்த தேரர் கொல்லப்பட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆயுதமேந்திய கும்பல்களுக்கு இடையே ஏராளமான வன்முறைகள் உள்ளன. ஏனெனில் அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் அதிக பங்குகளுக்காகவும் தங்களது பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றார்கள்.
பொலிஸார் அல்லது பாதுகாப்புப் படையினர் பெரிய அளவிலான சோதனைகளை மேற்கொள்ளும் போதெல்லாம், ஒரு போட்டிக் குழுவின் துப்பு அடிப்படையில் நாங்கள் செயற்படுகின்றோம் என்று குற்றவியல் குழுக்கள் நினைக்கிறார்கள்.
போட்டி கும்பல்களின் துப்பு காரணமாகவே போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டதாக குற்றவியல் குழுக்கள் நம்புகின்றன. எவ்வாறாயினும் சமீபத்திய வாரங்களில் நாங்கள் நிறைய போதைப்பொருட்களைக் கண்டுபிடித்துள்ளோம்.
இதேநேரம், பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் பிணை நிபந்தனைகளை தவிர்த்து விட்டு தப்பியோடி 188 பேர் மீது இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 63 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.” – என்றார்.