கோதுமை மாவில் விலையை குறைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியும் என இந்த அரசாங்கம் நினைத்தால் இது போன்ற முட்டாள்தனமான அரசாங்கம் வேறு ஏதும் கிடையாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரம் கோதுமை மா குறைந்த விலையில் வழங்கப்படும் என அரசாங்கம் விடுத்த அறிவிப்பு பெருந்தோட்ட மக்களை அவமதிப்பதாக அமைந்துள்ளதென அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் இதனை தனியார் ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு உரிய பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ள நிலையில் தனியார் ஊழியர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏன் ஐயாயிரம் ரூபா வழங்க முடியாது?
மானிய விலையில் 15 கிலோ கோதுமை மா வழங்கினால் அதன் பெருமதி வெறும் 500 ரூபா மாத்திரமே. அரச ஊழியர்களுக்கு 5000 ரூபாவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபாவும் வழங்கும் இந்த அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன? ஏன் இந்த பாகுபாடு?
இந்த அரசாங்கத்தினால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கவனிக்கப்படுகின்றனர்.
வெட்கமின்றி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் கோதுமை மா விலை குறைக்கப்பட்டதை வரவேற்றுள்ளனர். கோதுமை மா திட்டத்தை இராஜாங்க அமைச்சர் தனது அமைச்சின் கீழ் செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளார். வீடு கட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள குறித்த அமைச்சின் பெயரைக் கோதுமை மா விநியோக அமைச்சு என்று மாற்றினால் அதுவே சாலப் பொருத்தமானதாக இருக்கும்.
காரணம் வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட அமைச்சில் வீடுகள் கட்டப்படுவதில்லை. அதனால் கோதுமை மா வினியோகிக்கும் நிலைக்கு இந்த ராஜாங்க அமைச்சு தள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டும் போது அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான நிவாரணங்கள் வழங்கப்படுவதை ஒருநாளும் ஏற்று கொள்ள முடியாது.
அரசாங்கத்தின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க மாட்டார்கள். அரசாங்கத்தின் அழிவு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவின் பதவி நீக்கத்துடன் இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக பிரச்சினை காரணமாக மேலும் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவர்.
அதனுடாக நாட்டுக்கு பாதகமாக இருக்கும் இந்த அரசாங்கம் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.