Tuesday, November 26, 2024

Latest Posts

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் முகநூலில் இருந்து…

இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடந்த சந்திப்பில். தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எமக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றது. சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு நாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்திதினோம். இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருவிற்கு வாக்களித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை எம்.ஏ சுமந்திரன் மொழி பெயர்த்திருந்தார். இதன்போது பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக குறிப்பிட்டார்.

இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்திருந்தனர். அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர்.

கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு,

நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.

தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.

வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.

கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.