இந்த துப்பாக்கி பிரயோகம், வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அவருக்கு தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
40,000 ரூபா கடனட்டை மோசடி தொடர்பில் வௌ்ளவத்தை பொலிஸாரால் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பில், வெலிகமையிலிருந்து வழக்கு விசாரணைக்கு சென்றிருந்த பிரதிவாதி, குற்றவாளிக்கூண்டில் ஏறிய போது சந்தேகநபரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் முகக்கவசம் அணிந்தவாறு நீதிமன்றத்தின் மூன்றாவது கதவு வழியாக உள்ளே நுழைந்து நீதிமன்ற அறையில் பின்னால் காணப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்த நிலையில்,வழக்கின் முதல் பிரதிவாதி மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தை விட்டு தப்பியோடி, பொலிஸ் காவலரணை நோக்கி மீண்டும் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது நீதிமன்றில் 16 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும்,துப்பாக்கிச்சூடு இடம்பெற்றபோது நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸார் எவரும் இருக்கவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற பாதுகாப்பிற்காக T56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரிடம் ரிவால்வரே மாத்திரம் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.