மே 9ஆம் திகதி நடந்தது போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் அல்ல எனவும், போராட்டக்காரர்களால் தான் உட்பட நிராயுதபாணியான மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
மே 09 ஆம் திகதி பிரதமர் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், தான் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மனுவொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச் சென்று கொண்டிருந்த போது, போராட்டக்காரர்கள் தங்களை விரட்டி விரட்டி அடித்ததாகவும் தமது கட்சிக்காரர்கள் உயிர் பாதுகாப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும், போராட்டக்காரர்களின் தாக்குதலே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
கடந்த காலங்களில் போராட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை அழித்தல், அரச நிறுவனங்களுக்குள் புகுந்து அத்துமீறல் போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்காக இன்று சட்டத்தரணிகள் சங்கம் எழுந்து நிற்பதாக சனத் நிஷாந்த கூறுகிறார்.
இன்று கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு நாளை பிணை கிடைக்கும் எனவும், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தொல்பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எவ்வாறு பிணை வழங்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலைமைக்கு சட்டத்தரணிகள் சங்கம் மாத்திரமன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தின் சில அதிகாரிகளும் சில நீதிபதிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என சனத் நிஷாந்த குறிப்பிடுகின்றார்.