கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக அதிக அளவில் பெருந்தோட்டத் துறையில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் செப்டெம்பர் 2022க்கான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேயிலை உற்பத்தித் துறையானது பெருந்தோட்டத் துறையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக உயர்ந்த மட்டத்தைக் கொண்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது பெண் தலைமைத்துவ குடும்பங்கள், கல்வியறிவு இல்லாத குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி திட்ட பயனாளிகள் மத்தியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், உணவு, விவசாய உள்ளீடுகள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் கடுமையான தட்டுப்பாடு மற்றும் ஏற்றம் ஏற்பட்டது, விவசாய உற்பத்தியில் பெரும் இடையூறுகளுடன் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, வாழ்வாதார இடையூறுகள், உள்ளிட்ட பல காரணிகளின் விளைவாக, கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளில் உட்கொள்ளும் உணவின் எண்ணிக்கையைக் குறைத்தல், உணவின் அளவைக் குறைத்தல், சேமிப்புகளைச் செலவு செய்தல் மற்றும் கடனில் உணவை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட உணவு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான சமாளிக்கும் உத்திகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 2022 முதல் பெப்ரவரி 2023 வரை இந்நிலைமை மோசமடையக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
6.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (மக்கள் தொகையில் 28 சதவீதம்) மிதமான உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும், 66 000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சத்தான உணவைப் பெறுவதற்கான வாழ்வாதார திட்டங்கள் திறனை மேம்படுத்த, தற்போதுள்ள சமூக உதவி வழிமுறைகள் உட்பட, மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற மக்களுக்கு உடனடி உணவு உதவி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.