ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை தொடர்பான சமவாயம் மற்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட வைபவம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
சிறுவர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, “சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம்” மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
1989ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை தொடர்பான சமவாயத்துக்கு தற்பொழுது 33 வருடங்கள் நிறைந்துள்ளது. இந்த சமவாயத்தில் இலங்கை 1991ஆம் ஆண்டு கைச்சாத்திட்டதுடன், சமவாயத்துக்கு 25வது ஆண்டு பூர்த்தியாவதற்கு சமாந்தரமாக 2014ஆம் ஆண்டு “சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம்“ இலங்கையில் உருவாக்கப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அறிக்கையிடப்படுவதால் சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்த தேவையான சட்ட மாற்றங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சுகாதாரம், போஷாக்கு, கல்வி, போன்ற துறைகளில் சிறுவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு தமது ஒன்றியம் எதிர்காலத்தில் தலையிடும் என சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார்.
சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பணிகளைப் பாராட்டிய யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், எதிர்காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சபை முதல்வர், கல்வி அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே ஆகியோரும் உரையாற்றினர்.
அத்துடன், இந்த விசேட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழகங்களின் மாணவர் பிரதிநிதிகள், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமும், சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




