இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்

0
180

திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.41.65 லட்சம் தங்கம் மற்றும் செல்போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனை திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பெகரின், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கை வழியாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்வது வாடிக்கை.

அந்த வகையில் வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 2.45 மணி அளவில் இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (வயது 43) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர் தனது உடைமைகளில் மறைத்து எடுத்து வந்த 190 கிராம் தங்க சங்கிலி மற்றும் 39 கிராம் தங்க சங்கிலி, 51 கிராம் 2 காது வளையங்கள் என மொத்தம் ரூ.15.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அவரது மற்றொரு உடமைகளிலிருந்து ரூ.26.50 லட்சம் மதிப்பிலான 12 வெளிநாட்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு பயணியிடமிருந்து ரூ.41.65 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் மேற்கண்ட பயணி வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்ததாக தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here