ஊடகங்கள் அறிக்கையிட்டது போன்று பணியாளர்கள் ஓய்வுபெற்றமை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (05) அவருடைய தலைமையில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
புகையிரத திணைக்கள அதிகாரிகள் ஓய்வு பெறுவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டாலும் அது ஊடகங்களில் வெளியாகும் அளவுக்கு அதிகமாக இல்லை என வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சிறிய ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டாலும் ஊடகங்களால் அது பெரிதுபடுத்திக் காட்டப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் குறிப்பிடுகையில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவதால் எரிபொருள் விநியோகத்துக்காக அதிகளவான ரயில்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் ரயில் போக்குவரத்தை குறிப்பிட்டளவு குறைக்க வேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஊடகங்கள் அறிக்கையிடுவதைப் போன்று ரயில் போக்குவரத்து இரத்துச் செய்யப்படவில்லையென்றும் இது தொடர்பில் விளக்கமளிக்க இருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பணியாளர்கள் ஓய்வு பெறுவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் அவற்றை இம்மாத இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்குத் தேவையான நியமனங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இம்மாத இறுதிக்குள் இதனை முடிவுக்குக் கொண்டவர முடியும் என அதிகாரிகள் பதில் வழங்கினர். கடந்த ஆண்டு இறுதியில் 10 ரயில் சாரதிகள் மாத்திரமே ஓய்வு பெற்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெப்ரவரி மாத தொடக்கத்தில் கிடைக்கக்கூடிய திறனுக்கு ஏற்ப புதிய ரயில் நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தவிர, “எல்ல-ஒடிஸி” போன்ற சுற்றுலா அம்சங்களுடன் கூடிய தொலைதூர ரயில் சேவைகளுக்கான டிக்கட்டுக்களை 100 வீதம் ஒன்லைனில் பதிவுசெய்து பெற்றுக் கொள்வது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
மேலும், 203ஆம் அத்தியாயமான மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 158ஆம் பிரிவின் (2) ஆம் மற்றும் (3) ஆம் உப பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 237ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2022 ஜூலை 07ஆம் திகதி வெளியிடப்பட்ட 2287/28ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சிறிபால கம்லத், கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ சாந்த பண்டார, கௌரவ டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, கௌரவ சம்பத் அத்துகோரள, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ முதிதா பிரிஷாந்தி.த சொய்சா, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ சுமித் உடுகும்புர மற்றும் கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
N.S