வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாரிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதிசிவன் ஆலயத்தில் சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும் வைரவர் விக்கிரகங்கள் இருந்து வழிபட்ட சமயம் 2019ஆம் ஆண்டில் தொல்லியல்த் திணைக்களத்தின் தொல்லை காரணமாக எவருமே அப்பகுதிக்கு செல்ல முடியாது தடுக்கப்பட்டனர்.
இருந்தபோதும் இது தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்தின் விக்கிரகங்கள் அனைத்தும் அரச திணைக்களம் ஒன்றால் திருட்டுத் தனமாக எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் இன்று அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது ஆலயம் மற்றும் சூழலில் இருந்த மத அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் அகற்றப்பட்டுள்ளது.
எவரையும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுத்த தொல்லியல்த் திணைக்களம் அவ்வளவு ஆலய சொரூபங்களையும் அபகரித்துச் செல்வதற்கும் உடந்தையாக செயல்பட்டு விட்டதா எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்வாறு அரச திணைக்களத்தின் பெயரில் தடுத்து நிறுத்தி மத வழிபாட்டுத் தலத்தையே இல்லாது ஒழித்தமை அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகவே பார்ப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.