ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, தற்போது நண்பர்களிடமிருந்து இயன்றளவு பணம் வசூலித்து வருவதாக தெரிவித்தார்.
எனது ஆட்சிக் காலத்தில், நான் உலகின் நம்பிக்கையை வென்று ஜனநாயகத்தை நிலைநாட்டி, இதை ஒரு நல்ல நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈஸ்டர் தாக்குதல்கள் நிகழ்ந்து அனைத்தையும் அழித்துவிட்டன.
“இப்போது 100 மில்லியன் செலுத்துமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, நான் திருடவில்லை அல்லது வெடிகுண்டு வீசவில்லை. இப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வசூலிக்கிறேன். உங்களால் முடிந்தால், எனக்கு வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசத்தில் இருந்து 3 மாதங்கள் கடந்துவிட்டதால், முடிந்த தொகையை எனக்குக் கொடுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
குறித்த காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் நீதிமன்றம் தமக்கு எதிராக என்ன தீர்மானத்தை எடுக்கும் என்பது தனக்குத் தெரியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.