எப்போது உங்களுக்கு திருமணம்’ என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சமூகவலைத்தள பக்கத்தில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா அளித்த பதில் வைரலாகி வருகிறது.பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் 34 வயதான சோனாக்ஷி சின்ஹா. இவர், வளர்ந்து வரும் நடிகரான ஜஹீர் இக்பாலை பல வருடங்களாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி இருவரும் பொதுவெளியில் தங்களது காதலைப் பற்றி உறுதிப்படுத்தவில்லை.
எனினும், கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஜஹீர் இக்பாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மாதிரி அருமையான மனிதரை உலகத்தில் எங்காவது பார்க்க முடியுமா என்று உருக்கமாக சோனாக்ஷி சின்ஹா பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஜஹீர் இக்பாலுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் தற்போது, ‘டபுள் எக்ஸ்.எல்.’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சோனாக்ஷி சின்ஹா, இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் நேற்று ‘எது வேண்டுமென்றாலும் கேளுங்கள்’ என்ற தலைப்பில் கலைந்துரையாடினார். அப்போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சோனாக்ஷி சின்ஹாவின் வித்தியாசமான பதில் வைரலாகி வருகிறது. தற்போது பாலிவுட் பிரபலங்கள் பலரும் திருமணம் செய்துகொண்டு வரும்நிலையில், ரசிகர் ஒருவர் “மேம், அனைவருக்கும் திருமணம் நடக்கிறது. நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு, சோனாக்ஷி சின்ஹா “எல்லோருக்கும்தான் கோவிட் வருகிறது? நானும் கொரோனாவை பெற்றுகொள்ள வேண்டுமா?” என்று வேடிக்காகையாக பதிலளித்தார். இந்தப் பதில் தற்போது வைரலாகி வருகிறது.