நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய இலஞ்ச – ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு தரப்பினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் பிரகாரம், இலங்கை மற்றும் வெளிநாடுகளுடனான உடன்படிக்கைகளை செய்துகொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் அல்லது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு வெளிநாட்டு சட்ட அமலாக்க நிறுவனத்தால் நிறுவப்பட்ட சர்வதேச அமைப்புகளுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் அதிகாரம் இதன் ஊடாக ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின்படி குற்றம் இழைத்ததாக நம்பும் எந்தவொரு நபரையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணைகுழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் சில விதிகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதே புதிய சட்டத்தின் நோக்கம் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.
N.S