யாழில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகல் கடந்த ஆண்டு 355 ஆக காணப்பட்டபோதும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 200ஐ தாண்டி விட்டதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் 2023-05-31 அன்று இடம்பெற்றது.
இதன்போதே மேற்படி விடயமும் சுட்டிக் காட்டப்பட்டது. இதில் மாணவர்கள் இடை விலகளிற்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியே பிரதான காரணியாக காணப்படுகின்றது.
ஏனெனில் இடைவிலகும் மாணவர்கள் தொழிலுகுச் செல்கின்றனர் என யாழ்ப்பாணத்தின் 5 கல்வி வலயங்கள் சார்பிலும் சுட்டிக் காட்டப்பட்டது.
இதேநேரம் அதிக மாணவர்கள் இடைவிலகும் கல்வி வலயமாக காணப்படும் வலிகாமம் கல்வி வலயத்தில் கடந்த ஆண்டு முழுமையாக 170 மாணவர்கள் இடை விலகிய நிலையில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 137 மாணவர்கள் இடை விலகியுள்ளனர்.
இதேநேரம் தென்மராட்சி கல்வி வலயத்தில் கடந்த ஆண்டு 7 மாணவர்கள் மட்டுமே இடை விலகியபோதும் இந்த ஆண்டின் 4 மாதங்களில் 14 மாணவர்கள் இடை விலகியுள்ளனர்.
யாழ். வலயத்தில் கடந்த ஆண்டு 60 மாணவர்களும் தற்போது 20 மாணவர்களும் இடை விலகியுள்ளதோடு வடமராட்சியில் கடந்த ஆண்டு 72 மாணவர்களும் இந்த ஆண்டு இதுவரை 25 மாணவர்களும் இடை விலகியுள்ளதோடு தீவக வலயத்தில் கடந்த ஆண்டு 46 மாணவர்கள் இடைவிலகியபோதும் இதுவரை 4 மாணவர்கள் இடைவிலகியமை கண்டறியப்பட்டுள்ளது.