இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, திருகோணமலைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் செய்யவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணத்தையும் அவர் பார்வையிடவுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்தபோது, எண்ணெய்க் குழாய் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பாலம் அமைப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டிருந்தது.