இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐ. என். எஸ். நிரீக் ஷக்” போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (14) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
“ஐ.என்.எஸ். நிரீக் ஷக்” கடற்படைக் கப்பல் 137 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. கப்பலின் கப்டனாக ஜீது சிங் சௌஹான் செயற்படுகின்றார்.
இதேவேளை, கப்பலின் கப்டன் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15)காலை சந்தித்தார்.
இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தையும் மேம்படுத்தும் நோக்கில் கப்பலிற்குள்ளே குழுவினர்களால் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருகோணமலையில் சுகாதார முகாம், இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவுடன் இணைந்து சுழியோடும் பயிற்சிகள் மற்றும் நாட்டிலுள்ள சில சுற்றுலா தலங்களை பார்வையிடுதல் ஆகியவை முன்னெடுக்கப்படும்.