Friday, January 3, 2025

Latest Posts

மலையகம் 200 நிகழ்வில் தமிழக முதல்வரின் வாழ்த்து செய்திக்கு நடந்தது என்ன?

“இலங்கையில் நடைபெற்ற மலையகத் தமிழர்களின் 200-வது ஆண்டு விழாவில் என்ன காரணத்தால் தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தி ஒளிப்பரப்பவில்லை என்பது தெரியவில்லை” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இது குறித்து விருதுநகர் அருகே மல்லாங்கிணரில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,

“இலங்கையில் மலையகத் தமிழர்களின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்கதமிழக முதல்வர்அழைக்கப்பட்டார். முதல்வர் அங்கு செல்ல இயலாத நிலையில் அந்த விழாவுக்கு நான் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. நானும் இலங்கை செல்ல இயலாத நிலையில் இரு நாள்களாக ஊடங்களில் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு அரசின் சார்பில் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

இலங்கை மலையகத் தமிழர்கள் தோட்டப் பணிகளில் ஈடுபட்டு தங்களின் வாழ்வியலை இலங்கை மலையடுக்குகளில் வாழத்தொடங்கி அங்கு உள்ள தோட்டங்கலில் தங்களது உழைப்பை கொடுத்த நாள்களை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2-ம் திகதி இலங்கை தலைநகரான கொழும்புவில் கொண்டப்படும் விழாவுக்கு தமிழக முதல்வர் பங்கேற்க வேண்டும் என்று முறையான அழைப்பு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

முதல்வர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத நிலையில், அவருக்குப் பதிலாக அரசின் பிரிதிநிதியாக என்னை அந்த விழாவில் கலந்துகொள்ள பணிந்திருந்தார்.

இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களுக்கும் முறைப்படி தெரிவித்தோம். விழாவில் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகள் செய்வதற்காக முதல்கட்டமாக மத்திய அரசின் வெளிவிவகாரத்துறையிடம் இலங்கை பயணம் மேற்கொள்ள உரிய அனுமதிபெற கடந்த 28ம் திகதி விண்ணப்பம் அனுப்பப்பட்டுவிட்டது.

விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது பயண விவரங்களும் தெரிவிக்கப்பட்டது. விமான டிக்கெட் ஏற்பாடு செய்துவிட்டு வெளிவிவகாரத்துறையின் அனுமதி கிடைப்பதற்காக நானும் காத்துக்கொண்டிருந்தேன். விழா 2ம் திகதி பிற்பகல் நடைபெறுகிறது. ஆனால், 1ம் திகதி இரவு 9 மணி வரை அனுமதி மத்திய அரசின் வெளிவிவகாரத்துறையிடமிருந்து வரவில்லை. நான் அன்று இரவு 8.30 மணி வரை தலைமை செயலகத்தில் இருந்தேன். அப்போது, அதிகாரிகளிடம் கேட்டபோது அதுவரை அனுமதி வரவில்லை. அதற்கு பிறகு அனுமதி வருவது கடினம் என்ற சூழ்நிலையில், மீண்டும் விழா ஏற்பட்டாளர்களை அழைத்து நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையை விளக்கினேன்.

அதன்பின், நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரத்துசெய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப் பிறகு 1ம் திகதி இரவு 9.30 மணிக்கு மேல் அனுமதி வந்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே பயண ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டோம். பின்னர், 2ம் திகதி காலை சுமார் 11 மணி அளவில், விழா ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொண்டு முதல்வரின் வாழ்த்துச் செய்தி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

உடனடியாக முதல்வர் பல்வேறு பணிகள் இருந்தாலும், இந்த விழாவின் முக்கியத்துவம் கருதி நேரம் ஒதுக்கி வாழ்த்துச் செய்தியும் தயார் செய்து அங்கே அனுப்பிவைத்தார்கள். அந்த வாழ்த்து செய்தி பிற்பகல் 2 மணிக்கு அங்கு கிடைத்துவிட்டது. முதல்வர்கள் வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்தார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ முதல்வரின் வாழ்த்துச் செய்தி அங்கு ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

அந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தால் முதல்வரின் வாழ்த்துச் செய்தி ஒளிப்பரப்பவில்லை என்பது தெரியவில்லை. அதற்கான காரணத்தை உங்கள் யூகத்துக்கு விட்டுவிடுகிறேன்.

ஆனால், முதல்வரின் வாழ்த்துச் செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதைத்தான் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.

இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளதா என்ற கேள்விக்கு, “நான் யாரையும் நேரடியாக சொல்ல விரும்பவில்லை. ஆனால், என்ன காரணத்தால் தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தி அங்கே முறையாக ஒளிபரப்பு செய்ய முடிவில்லை என்பதற்கான காரணத்தை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்” என்று பதில் அளித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.