வயது வந்தவர்களுக்கு இடையில் சுயவிருப்பத்தின் பேரில் ஏற்படும் ஒருபாலின பாலியல் உறவை இலங்கை தண்டனை கோவைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுளில் இருந்து நீக்குதல்/திருத்தம் செய்ய பரிந்துரைத்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
நவம்பர் 23, 2023 திகதியிட்ட கடிதம், தண்டனை கோவைச் சட்டத்தின் 365 மற்றும் 365a பிரிவுகள் தொடர்பாக 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 10(d) ஐக் குறிக்கிறது.
மேற்படி சட்டத்தின் 10(d) பிரிவின்படி தேசிய சட்டம்… சர்வதேச மனித உரிமைகோரல் விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகள் செய்யப்படும் என்று நினைவுகூரப்படுகிறது.
அதன்படி, இலங்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் பிரேம்நாத் டோலவத்தவினால் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை அங்கீகரித்து வெளியிடப்பட்ட தீர்மானத்தின்படி, வயது முதிர்ந்தவர்களுக்கிடையில் தன்னார்வ சம்மத பாலுறவு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என்பதை நினைவுகூர்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த சட்டமூலத்தை விரைவாக உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவாக ஒப்புதல் அளித்துள்ளது. மேற்படி சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வது சட்டமாக அமுல்படுத்துவது தொடர்பில் நீதி அமைச்சர் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.