பிரதமரின் பேச்சின் படி, மாகாண சபைத் தேர்தலை இரண்டு கட்சிகளும் நடத்த விருப்பம் என்றால் உடன் தேர்தல் நடாத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்துவதிலே இருக்கக் கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாக பேசப்படுகின்றது. எங்களுடைய உறுப்பினர் சுமந்திரன் ஒரு தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். பழைய முறையிலே சென்று தேர்தலை நடத்த முடியும் என்று. ஆகவே இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்த மட்டில் இந்த மாகாண சபை என்பது ஒரு அதிகார போட்டிக்கான விஷயமாக இருக்கிறதே ஒழிய தமிழ் மக்களை பொறுத்த மட்டில் இது ஒரு முக்கியமான விடயமாகும். ஆகக் குறைந்தது சிறிதளவாவது நாங்கள் எங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய விடயங்களை பார்ப்பதற்கான ஒரு சபையாக பார்க்கின்றோம்.
ஏனென்றால் எங்களுக்கு தெரியும் இந்த மாகாண சபை ஒரு முழுமையான தீர்வாக இருக்க முடியாமல் விட்டாலும் நிச்சயமாக அதனை நாங்கள் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் பல தடவைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே இப்போது பிரதமர் எதிர்க்கட்சியிலே இருக்கின்றவர்களும் இதனை நடத்தத்தான் வேண்டும் என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஆகவே நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று வினயமாக கேட்கின்றோம்.
பிரதமர் நான்கு மிக முக்கிய அமைச்சுக்கு பொறுப்பாக இருக்கின்றார். மிக முக்கிய அமைச்சுக்கள் நாட்டின் முழுமையான நிர்வாகத்துக்கு அது பொறுப்பாக இருக்கின்றது. பிரதமரை பொறுத்த மட்டில் அவர் ஒரு நீண்ட காலம் அதாவது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாராளுமன்ற அங்கத்தவராக இருந்திருக்கிறார்.
பல தடவைகள் அமைச்சராக இருந்திருக்கிறார். பல தடவைகள் அவர் அமைச்சராக இருந்த காலங்களில் எல்லாம் பல பிரச்சினைகளை கொண்டு செல்லுகின்ற போது அவர் அதனை கரிசனையாக கேட்டு முழுமையாக நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றார்.
அவரைப் பொறுத்த மட்டில் இந்த விஷயங்களிலே மிக கவனமாக நேர்மையாக யார் எந்த எதிர்க்கட்சியில் இருந்தால் என்ன? அதனை கொண்டு வந்தால் அதனை தீர்ப்பதில் மிக அக்கறையாக செயல்பட்டிருக்கிறார். எங்களுடைய பிரச்சினையிலும் நான் நேரடியாக எடுத்துச் சொன்ன பிரச்சினையை அவர் தீர்த்திருக்கிறார். நான் கட்டாயமாக அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.