தம்மிக்க பெரேராவை முன்னிறுத்தி, பெசில் மற்றும் நமல் ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கடந்த வாரம் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
“ஜனாதிபதி தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளார்” என்றும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பலர் அதற்கு தலைமை தாங்கவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், பிரமித்த தென்னகோன் ஆகியோர் பிரச்சாரத்தின் முக்கியஸ்தர்களாக உள்ள நிலையில், பிரச்சார முகாமையாளராக சாகல ரத்நாயக்க செயற்படுகிறார் எனவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோடிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டாலும், இன்னும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
எனினும், எதிர்வரும் ஆண்டில் முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா என்ற விஷயம் பற்றி இன்னும் தெளிவாகச் சொல்லப்படவில்லை.
இது குறித்து இருதரப்பு வாதங்கள் அரசியல் அரங்கில் அதிகம் பரிமாறப்படுகின்றன. “எப்படியும் அடுத்த வருடம் தேர்தல் வரப்போகிறது. நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றுதான் பெரும்பாலான அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.