ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிரக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன் போதே உத்தேச தேசிய தேர்தல்களுக்கான கால அட்டவணையை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன, ரவி கருணாநாயக்க, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ, கித்சிறி மஞ்சநாயக்க மற்றும் தினொக் கொலம்பகே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடம் என்பதை அனைவரும் அறிவார். ஏனெனில் ஏற்கனவே நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளேன். இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாராளுமன்றம் தேர்தல் நடாத்தப்படும். அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் அனைத்து மாகாணங்களுக்குமான மாகா சபை தேர்தல் நடைப்பெறும்.
தேர்தல்கள் குறித்த முறையான தகவல்களை மக்கள் மையப்படுத்துங்கள். எவ்விதத்திலும் தவறான கருத்துக்கள் மக்களை சென்றடைய கூடாது. தேர்தல்கள் குறித்த தகவல்களை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கும் கொண்டு செல்லும் பொறுப்பை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கின்றேன் என கூறினார்.
இதனை தொடர்ந்து இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் பரந்துப்பட்ட கூட்டணிக்கான தீர்மானம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தும் தீர்மானம் ஆகியவை முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு அங்கிகாரம் அளித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பிகாரம் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிரங்க உள்ளார். அதே போன்று உத்தேச அரசியல் கூட்டணிக்கான சின்னம் மற்றும் பெயர் ஆகிய விடயங்களில் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புக்கள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.