டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக
மாணவியொருவர், நேற்று உயிரிழந்துள்ளார்.
மபுதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி நேற்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2024 ஜனவரி மாதம் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானடெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பை அடுத்ததாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1076 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.