Monday, January 20, 2025

Latest Posts

கொக்குத்தொடுவாய் புதைகுழி: சடலங்கள் விடுதலைப் புலிகளுடையது  

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையது எனத் தெரியவந்துள்ளது.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கையளித்த குறித்த இடைக்கால அறிக்கை மொத்தமாக 35 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளது.  

பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் குறித்த இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெறவில்லை என்பதோடு  1996ற்குப் பின்னர் இடம்பெறவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து சடலங்கள் 1994 மற்றும் 1996ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டதெனவும், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2023 நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங்கள்  மீட்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.